உதயநிதி போகின்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேராதரவு கிடைக்கிறது – மு.க.ஸ்டாலின்
உதயநிதிக்கு முன்னுரிமை என்று பேசுவது எல்லாம் எதையாவது சொல்லி தி.மு.க.வை எப்போதும் குறை சொல்பவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
அப்பொழுது அவரிடம் ,உங்கள் மகனும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? அதே நேரத்தில் அவரது நுழைவு குடும்ப அரசியலை ஊக்குவிப்பதாகக் குற்றச்சாட்டை எழுப்புமல்லவா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த ஸ்டாலின்,
கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக, தலைமுறை தலைமுறையாக, கட்சிக்காக உழைப்பதை எப்படி குடும்ப அரசியல் என்று கூற முடியும்? தி.மு.க. தோழர் ஒருவர் கட்சிக்காக உழைப்பது எப்படி குடும்ப அரசியல் இல்லையோ – அதே போல் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்காக- ஊழல் அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து – தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி அமைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக மக்களின் நலனுக்காக பிரச்சாரம் செய்கிறார்.அவர் கலைஞரின் பேரன் என்பதால், அவரது ஆர்வமும், பரப்புரையும் இயல்பானவைதானே!
நாடாளுமன்றத் தேர்தலிலேயே தி.மு.க.விற்கும் – தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அதைத்தான் இப்போதும் சட்டமன்றத் தேர்தலையொட்டி செய்து கொண்டிருக்கிறார். போகின்ற இடங்களில் எல்லாம் அவர் பிரச்சாரத்திற்கு மக்களின் பேராதரவு கிடைக்கிறது என்பதை ஊடகங்கள் மூலமாக நீங்கள் அறியலாம். தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படித்தான் வாய்ப்பினைப் பெற்றேன். கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் அப்படி உழைத்துத்தான் கட்சியில் முன்னேறியிருக்கிறார்கள். இதில் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று பேசுவது எல்லாம் எதையாவது சொல்லி தி.மு.க.வை எப்போதும் குறை சொல்பவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.