200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை -கமல்ஹாசன்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குபிறகு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது சுமார் 7 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.பின்னர் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு கோவை மகிளா நீதிமன்றம் பிறப்பித்தது.மேலும் அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்க்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது.
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2021