தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடையில்லை – சுகாதார துறை அமைச்சகம்
கொரோனா தடுப்பு ஊசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசர தேவைக்கு பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தடுப்பூசிகளைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவியது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்றும், அப்படி எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்துக் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு ஊசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்கவில்லை. நான் மத்திய அரசு என்று கூறும் போது மூன்று அமைச்சகங்கள் உள்ளனர். சுகாதார அமைச்சகம், வணிக அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகியவற்றுடன் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை ஆகியவையும் உள்ளன.
இந்த அமைப்புகள் நெருக்கடியான காலத்தில் இதுபோன்ற தடை நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இது போன்ற தவறான தகவல்களை பரப்ப முற்படும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே ஊடக நண்பர்களுக்கான வேண்டுகோள் என்றும் தெரிவித்துள்ளார்.