அதிமுக-வில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம்! அதற்கு நானே சாட்சி! – முதல்வர்
வருகிற சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். அதற்கு நானே சாட்சி.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அதிமுக சார்பில் ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, திமுக குடும்ப கட்சியாக இருந்து கொண்டு, வாரிசு அரசியல் நடத்துகிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தாத்தா, மகன், பேரன் என்று வரிசையாக வருகின்றனர். ஆனால் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். அதற்கு நானே சாட்சி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திமுக தான் கையெழுத்து போட்டது. அதுபோல் ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கத்திற்கும் கையெழுத்துப் போட்டது திமுக தான். ஆனால் அவர்கள் தான் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்கு திமுக துடிக்கிறது. விஞ்ஞான உலகில் மக்கள் இருப்பதை மறந்து மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார் என்றும், அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள், அதனால் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.