கோவிஷீல்ட் தடுப்பூசி அரசுக்கு ரூ.200, தனியாருக்கு ரூ.1000 – ஆதார் பூனவல்லா
கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, இந்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ.200 க்கு விற்கப்படும் என்று எஸ்ஐஐ தலைவர் ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு மற்றும் பூனே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, இந்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ.200 க்கு விற்கப்படும் என்றும் தனியாரில் வாங்குபவர்களுக்கு, ஒரு டோஸுக்கு ரூ.1,000 விலைக்கு விற்கப்படும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியின் முதல் 100 மில்லியன் டோஸ் இந்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ.200 என்ற விலையில் விற்கப்படுவதாகவும், அதன் பிறகு விலைகள் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசுடனான ஒப்பந்தத்தை முடித்த பிறகு 7 முதல் 10 நாட்களுக்குள் தடுப்பூசி தேவைப்படும் மாநிலங்களுக்கு வழங்கப்படலாம் எனவும் கூறினார். தடுப்பூசியை தனியார் சந்தையில் விற்பனை செய்வதற்கு அந்நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது.
அதனால், நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு மட்டுமே கொடுக்க முடியும். சீரம் நிறுவனம் 300 முதல் 400 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கு கோவாக்ஸுடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவுக்கும் கோவாக்ஸுக்கும் இடையிலான தடுப்பூசிகளின் விநியோகத்தை நிறுவனம் சமப்படுத்த வேண்டும். இப்போது அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாது. நாங்கள் முன்னுரிமை அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.