கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று!
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியரான மாத்யூ பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் மீண்டும் அவருக்கு கொரோன தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியரான மாத்யூ டிசம்பர் 18ஆம் தேதி இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டார். பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டதும் இவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டார்.
ஆனால் டிசம்பர் 24ஆம் தேதி மாலை அவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சான் டியாகோ தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் கிறிஸ்டியன் ராமர்ஸ் கூறும்போது, இது ஆச்சரியம் தான். ஆனால் எதிர்பார்க்காதது எனக் கூற இயலாது. அவருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பே அவருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அவரிடம், தடுப்பூசி போட்டுக் கொண்டபின் தொற்ருக்கு வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தடுப்பூசி போட்டுக் கொண்டபின் வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாக 10 முதல் 14 நாட்கள் வரை ஆகும். ஆகவே பாதுகாப்பாக இருத்தல் நலம் என்று கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொண்டோம் என்ற தைரியத்தில், வெளியில் சுதந்திரமாக நடமாட கூடாது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றுவதை மறந்துவிடக்கூடாது.