ரூ. 2500 -க்கான டோக்கன் ! இன்றே கடைசிநாள் விநியோகம்..!
ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார். ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் 2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே தமிழகத்தில் அனைத்து ஆட்சியர்களுக்கும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற 26-ஆம் முதல் இன்று வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13- ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என குறிப்பிட்டது. வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படும். விடுபட்டவர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதி அன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.