பழைய இரும்பு கடையில் விற்கப்பட்ட பாடப்புத்தகங்கள்! மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கைது!
பழைய இரும்பு கடையில் இலவச பாடப் புத்தகங்களை விற்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் முத்து வக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான இலவச பாடப்புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்ததில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடபுத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. பழைய இரும்பு கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்ட நிலையில், பழைய இரும்பு கடையில் இலவச பாடப் புத்தகங்களை விற்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இரும்பு கடை உரிமையாளர் பெருமாளையும் போலீசார் கைது செய்து, மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.