விமானத்தில் கொசுத்தொல்லை இருக்குனு சொன்னது தப்பா?டாக்டரை சரமாரியாக தாக்கி கீழே இறக்கிய இண்டிகோ ஊழியர்கள் ….!

Default Image

பெங்களூரைச் சேர்ந்த இதயநோய் டாக்டர் சுரப் ராயை  உத்தரப்பிரதேசம் லக்னோ நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதாக புகார் கூறிய நிலையில் அவரை , தாக்கி வலுக்கட்டாயமாக கீழே இறக்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த இதயநோய் டாக்டர் சுரப் ராய். இவர் திங்கள்கிழமை காலை 6மணிக்கு லக்னோவில் இருந்து பெங்களூரு செல்வதற்காக இன்டிகோ நிறுவனத்தின் 6இ-541 என்ற விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

திங்கள்கிழமை காலை இன்டிகோ விமானம் லக்னோவில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படத் தயாரானது. அப்போது, விமானத்தில் ஏறிய டாக்டர் சுரப் ராய் விமானத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் எப்படி பயணிப்பது என்று விமான ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விமான ஊழியர்கள் அமைதியாக உட்காருங்கள் என சுரப்ராயிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுரப் ராயுக்கும், விமான ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த டாக்டரை வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு விமானம் புறப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய மேலாளரிடமும், இன்டிகோ நிறுவனத்திடமும் டாக்டர் சரப் ராய் புகார் செய்தார். இந்த விவகாரம் தற்போது பெரிதாகியுள்ளது.

இது குறித்து சுரப்ராய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘இன்டிகோ விமானத்தில் லக்னோவில் இருந்து பெங்களூருவுக்கு வர டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். ஆனால், விமானத்தில் ஏறினால், கொசுத்தொல்லை இருந்தது. இது குறித்து கேள்விகேட்டபோது, என்னை விமான ஊழியர்கள் தாக்கினார்கள். என்னைத் தீவிரவாதி என்றும், விமானத்தை கடத்தப்போகிறாயா? என்றும் மரியாதைக் குறைவாக பேசினார்கள். அவர்களிடம் மரியாதைக் குறைவாக பேசியது குறித்து கேட்டபோது, என்னைத் தாக்கி, விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டுச் சென்றனர்’எனத் தெரிவித்தார்.

இது குறித்து இன்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ‘வாடிக்கையாளர் திருப்திபடுத்துவதே எங்களின் முன்னுரிமையாகும். அதேசமயம், பயணிகளின் பாதுகாப்பும், பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் எங்களுக்கு இருக்கிறது.பயணி கூறும்புகாரின் மீது உண்மைஇருந்தால், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல டெல்லி விமானநிலையத்தில் பயணி ஒருவரை இன்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் தாக்கி கீழே தள்ளியது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பானது. அதன்பின் அந்த நிறுவனம் பயணியிடம் மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்