IPL 2018:1000 நாட்களுக்குப் பின் சொந்த மண்ணில் கால்பதிக்கும் சென்னை அணி..!சேப்பாக்கம் மைதானத்தில் 67% வெற்றியே பெற்றுள்ளது..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமார் 1000 நாட்களுக்குப் பின் சொந்த மண்ணில் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாவது ஆட்டம் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்று மாலை நடைபெறவுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தாய் மண்ணில் சென்னை அணி விளையாடும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. எனவே போட்டியை காண்பதற்கான அனைத்து டிக்கெட்டுகளும் வெறும் இரண்டு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றை வைத்து பார்க்கும் போது பெரும்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கினாலே வெற்றி என்பது உறுதி. சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சென்னை அணி விளையாடிய போட்டிகளில் 67% வெற்றியே பெற்றுள்ளது. அதில் கொல்கத்தாவுக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி 2011 ஐபிஎல் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி உட்பட எட்டு போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்த எட்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், ஐபிஎல்லில் ஒரு சீசனில் தனது சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற முதல் அணி எனும் பெருமையை சென்னை அணி பெற்றது. மேலும் சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் விளையாடி கோப்பை வென்ற முதல் அணி எனும் பெருமையையும் சென்னை அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே இன்றைய போட்டியிலும் சென்னை அணி சிறப்பாக விளையாடி சொந்த மண்ணில் வெற்றி பெரும் என்று ரசிகர்கள் போட்டியை எதிர்நோக்கி சென்னைக்கு பெரிய விசில் போட காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.