ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.., புதிய கேன்டீனை திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்.!
ஆதரவற்ற மக்கள் ஒருநாளில் இரண்டு வேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது – கவுதம் காம்பீர்
முன்னாள் இந்திய அணி வீரரும், கிழக்கு டெல்லி தொகுதி எம்பியாக வெற்றி பெற்றுள்ள கவுதம் காம்பீர், தனது தொகுதிக்குட்பட்ட காந்திநகர் மார்க்கெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாயில் சாப்பிடும் வகையில் புதிய கேன்டீனை திறந்து வைத்துள்ளார். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 பேர் சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான, சத்தான உணவு வகைகள் ஏழை, எளிய மக்களுக்காக வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து பேசிய எம்பி கவுதம் காம்பீர், ஏழை, எளிய மக்களுக்காக இந்த கேன்டீன் இங்கு திறக்கப்பட்டுள்ளது. இதுபோல தொகுதி முழுவதும் குறைந்தது 5 அல்லது 6 கேன்டீன்கள் திறக்கப்படும். அடுத்த கேன்டீன் மயூர் விஹார் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த கேண்டீனில் வசூலிக்கும் ஒரு ரூபாய், இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பயன்படுத்தப்படும். மக்களுக்கு தரமான, சத்தான உணவு வழங்குவதே எனது நோக்கம். ஆதரவற்ற மக்கள் ஒருநாளில் இரண்டு வேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது.
இதனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பிளேட் உணவு இங்கு வழங்கப்படுகிறது. இந்த கேண்டீனில் ஒருநாளில் 500 பேருக்கு உணவு வழங்கப்படும். சிறப்பு நாட்களில், அரிசி சாதம், பருப்பு, காய்கறி கூட்டு ஆகியவை வழங்கப்படும். உணவு தேவைப்படும் நபர்கள் திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். கவுதம் கம்பீரின் இந்த ஒரு ரூபாய் கேண்டீன் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை பலரும் பாராட்டியும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Didn’t enter politics for drama or publicity but to see real CHANGE!
Delhi’s first “Jan Rasoi” will provide nutritious food at ₹1! More to come! #FoodForAll pic.twitter.com/UA7pFSSq3g
— Gautam Gambhir (@GautamGambhir) December 24, 2020