விவசாயிகளை தவறாக எதிர்க்கட்சிகள் வழிநடத்தி வருகிறது – பிரதமர் மோடி
கடந்த நான்கு வாரங்களாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தவறாக எதிர்க்கட்சிகள் வழிநடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின்கீழ், 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகையான 18 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார்.இதன் பின்பு தொடர்ந்து ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.அப்பொழுது அவர் கூறுகையில், கட்சிகள் அரசியல் செய்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டாம்.இதற்கு முன்னர் இந்த வேளாண் சட்டங்களை ஆதரித்த கட்சிகள் உள்ளன. அவர்களின் எழுத்துப்பூர்வ அறிக்கை எங்களிடம் உள்ளது. ஆனால் இப்போது அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்.வேளாண் சட்டங்கள் குறித்து சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.ஆனால் விவாதம் பிரச்சினைகள், உண்மைகள் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நான் மனத்தாழ்மையுடன் சொல்கிறேன்.
விவசாயிகள் குத்தகை விவசாயத்தில் ஈடுபட்டால், அவர்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என கூறுவது முற்றிலும் பொய்யான தகவல்.வேளாண் உற்பத்தி செலவை குறைக்க மண் பரிசோதனை அட்டை, உரங்கள் மீதான வேப்பெண்ணெய் பூச்சு, சூரிய மின்சக்தி, மோட்டார் வசதி உள்ளிட்ட வசதிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.விவசாயிகளின் வாழும் முறையை எளிமையாக்குவதற்காகவே அரசு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.எங்களுக்கு எல்லா அறிவும் இருப்பதாக நாங்கள் கூறவில்லை. விவாதம் இருக்க வேண்டும். ஜனநாயகம் அப்படித்தான் செயல்படுகிறது. அனைத்து பிரச்சினைகளையும் திறந்த மனதில் தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம், ”என்று பிரதமர் மோடி கூறினார்.