இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது இத்தாலி பைக் சூப்பர்டியூவல் டி600 அட்வென்ச்சர்..!!
எஸ்டபிள்யூஎம்(SWM motorcycle) மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் தனது சூப்பர்டியூவல் டி600 அட்வென்ச்சர்(Superfast D600 Adventure) ரக பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
கைனெட்டிக் குழுமத்தின் மோட்டோராயல் பிரிவு இந்த பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த நிலையில், புனே நகரில் நடந்த கிரேட் ட்ரெயில் அட்வென்ச்சர் நிகழ்வில், புதிய எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி600 பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
புதிய எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி600 பைக்கில் கிராஷ் கார்டு, லக்கேஜ் டிராக்,பேனியர்ஸ் மற்றும் துணை ஹெட்லைட்டுகள் போன்றவை நிரந்தர ஆக்சஸெரீகளாக இடம்பெற்று இருக்கின்றன. கூடுதல் ஆக்சஸெரீகளுடன் சேர்ந்து, இந்த பைக் 169 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் ஆயில் கூல்டு சிஸ்டம் கொண்ட 600சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 53.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் கூடிய ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
பிரேம்போ பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது. புதிய எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி600 பைக் 898மிமீ இருக்கை உயரம் கொண்டிருக்கிறது. இருக்கை உயரத்தை 20 மிமீ வரை குறைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
ஆஃப்ரோடு பயன்பாட்டிற்காக ஸ்போக்ஸ் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புதிய எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி600 பைக் ரூ.6.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. வரும் ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மோட்டோராயல் நிறுவன வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.