கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!
பாஜக,கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 72 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 12-ம் தேதி நடைபெறுவதால் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளனர். மஜத முதல் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக நேற்று முன் தினம் இரவு 72 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது.
இதில் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எடியூரப்பா கடந்த தேர்தலில் வென்ற தொகுதியில் மீண்டும் களமிறங்குவதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் கோலார் தங்கவயல் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ சம்பங்கிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
72 பேர் கொண்ட பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் கிறிஸ்துவம், இஸ்லாம், பவுத்தம், சமணம் உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பினருக்கு ஓர் இடம் கூட வழங்கப்படவில்லை. அதே வேளையில் லிங்காயத்துகளின் வாக்குகளை குறிவைத்து 21 லிங்காயத்து சமூகத்தினருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.