ஸ்ரீநகர் தால் ஏரியில் விரைவில் படகு ஆம்புலன்ஸ் சேவை..!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் தாரிக் அஹ்மத் பட்லூ என்பவர் படகு ஆம்புலன்ஸ் சேவையை விரைவில் தொடங்கவுள்ளார். இப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த சுகாதார வசதிகளுடன் கூடிய படகு ஆம்புலன்ஸ் சேவை பயனளிக்கும் என கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அப்போது என்னை அழைத்துச் செல்ல யாரும் தயாராக இல்லை என்று அவர் கூறினார். இதனால் மருத்துவமனைக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட பின்னர், இறுதியாக எனது நண்பர் ஒருவர் படகு எடுத்து வந்தார்.
இதன் காரணமாக தால் ஏரி பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக படகு ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்க நான் முடிவு செய்தேன். ” நானே படகு ஆம்புலன்ஸை வடிவமைத்தேன், அது எனக்கு கிட்டத்தட்ட 25 நாட்கள் ஆனது, படகு உருவாக்கும் பணி 90 சதவிகிதம் முடிந்த நிலையில்,10 சதவிகிதம் மட்டுமே நிலுவையில் உள்ளது, மிக விரைவில் படகு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த படகு ஆம்புலன்ஸில் “ஆக்ஸிஜன் சிலிண்டர், ஈ.சி.ஜி, ஆக்சிமீட்டர், சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. இந்த வசதி சுற்றுலாப் பயணிகளுக்கும் உதவியாக இருக்கும் என கூறினார்.