டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ கைது..!
டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விகாஸ் காஞ்சந்தனி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகிய பின்னர் கைது செய்யப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சந்தனி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும் டி.ஆர்.பியில் மோசடி நடந்ததாக கூறி ஹன்சா ஆராய்ச்சி அதிகாரி நிதின் தியோகர் அளித்த புகாரைத் தொடர்ந்து மும்பை போலீசார் அக்டோபர் 6 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதில் ரிபப்ளிக் தொலைக்காட்சி உட்பட மூன்று சேனல்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதிக டிஆர்பி காரணமாக, விளம்பரங்களை அதிக கட்டணம் வசூலிக்க முடியும். இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய சேனல்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. இதைத்தொடர்ந்து, ரிபப்ளிக் தொலைக்காட்சி மூத்த பத்திரிகையாளரும், சேனலின் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக மற்றொரு பழைய வழக்கில் கைது செய்தனர். இருப்பினும், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கடந்த வியாழக்கிழமை மும்பை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார், அதில், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மேலும் விசாரணையை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.