IPL 2018:நரேனிடம் கேப்டன்ஷிப்பை பறிக்கொடுத்தாறா விராத் கோலி?தவறு செய்த கோலியால் எழும் குற்றச்சாட்டுகள் …!
விராட் கோலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேனுக்கு எதிராக சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் திறன்மிக்க வகையில் பயன்படுத்தாமல் தவறு செய்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன்.
இடது கை ஆட்டக்காரரான சுனில் நரேன், 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
இந்நிலையில், பேட்டிங்கில் அதிக நிபுணத்துவம் இல்லாத சுனில் நரேன் முதல் போட்டியில் புகழின் உச்சத்துக்கு சென்றுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் சுனில் நரேனின் அதிகபட்சமே 30 ரன்கள்தான். மற்றவகையில் பல்வேறு நாடுகளில் நடந்த லீக் ஆட்டங்களில் அதிகபட்சம் 79 ரன்கள் வரை சேர்த்துள்ளார்.
எனினும் அதிலும் சராசரி என்பது 30 ரன்களுக்கு மேல் கிடையாது. அப்படி இருக்கும் போது, நரேனின் திடீர் அதிரடிக்கு காரணம் சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் விராட் கோலி முறையாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுனில் நரேனைப் பொறுத்தவரை டி20 போட்டிகளி்ல் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அவரின் ரன் சேர்ப்பு திறன் என்பது 15.93 சதவீதமும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 36 சதவீதமாகும். அதாவது சுழற்பந்துவீச்சு மூலம் நரேனின் ரன்குவிப்பை 69 சதவீதம் கட்டுப்படுத்த முடியும், வேகப்பந்துவீச்சில் 51 சதவீதம் கட்டுப்படுத்த முடியும் என்று இஎஸ்பிஎன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த கால நரேனின் பேட்டிங்கையும், எந்த பந்துவீச்சில் அதிகமாக ஆட்டமிழந்துள்ளார் என்று ஆய்வு செய்தால், கடந்த 36 இன்னிங்ஸ்களில் 29 முறை வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். கடந்த 18 இன்னிங்ஸ்களில் 6 முறை மட்டுமே சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.
அப்படி இருக்கும் போது, நரேனுக்கு எதிராக ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் திறமையாக கேப்டன் விராட் கோலி கையாண்டு இருக்கலாம். அதாவது, அவர் அடித்து ஆடத் தொடங்கும்போதே வேகப்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
ஆனால் நேற்றையப் போட்டியில், நரேனின் சேர்த்த அரைசதத்தில் 30 ரன்கள் வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு மூலம் கிடைத்தவையாகும்.
மேலும், ஆப்-ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசும் போது, லாங்-ஆப் திசையில் எந்தவிதமான பீல்டரையும் கோலி நிறுத்தவில்லை. அதேபோல லெக் ஸ்பின்னர் சாஹல் பந்துவீச வரும்போது, டீப் மிட்விக்கெட்டில் பீல்டர்களை நிறுத்தாமல், அதிகமாகன இடைவெளி இருந்தது. இது நரேன் அடித்துஆடி ரன் சேர்க்க முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த இடைவெளியில் பீல்டர்களை நிறுத்தி இருந்தால், ரன்வேகத்தையும் கட்டுப்படுத்தி இருக்கலாம், விக்கெட்டையும் எடுத்திருக்கலாம்.
மேலும், கிறிஸ்வோக்ஸ் பந்துவீச்சும் அதிகமான அளவில் அவுட் ஸ்விங் ஆக வந்தது. அந்த நேரத்தில் ஆப்-ஸைடில் பீல்டர்களை அதிகமாக நிறுத்தாமல் விட்டதும் நரேனின் அதிரடியாக சில ஷாட்களை அடிக்க முக்கியக் காரணமாகும்.
அதன்பின், நரேனுக்கு எதிராக பந்துவீச உமேஷ் யாதவ் அழைக்கப்பட்டார். இவரின் சிலபந்துகளை அடித்த நரேன், லோ-புல்டாஸ் பந்தை அடிக்க முடியாமல் இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகினார்.
ஆதலால், நரேனுக்கு எதிராக சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் விராட் கோலி சரியாக கையாளாமல் விட்டுவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.