மலை இலந்தையின் மருத்துவ குணங்கள் குறித்து அறியலாம் வாருங்கள்!
இலந்தை பழம் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் இனிப்பு கலந்த லேசான புளிப்பு சுவையுடன் இருக்க கூடிய மலை இலந்தைப் பழம் பலருக்கும் பிடிக்கும். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் தெரியாது, அவற்றைக் குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மலை இலந்தையின் மருத்துவ குணங்கள்
சீனாவை பிறப்பிடமாகக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மருந்தாக பயன்பட்டு வரக்கூடிய மலை இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி3, பி6 ஆகியவையும் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் கார்போஹைட்ரேட் மற்றும் அதிக அளவில் புரதமும் காணப்படுகிறது. இதில் பழம் மட்டுமல்லாமல் வேர், இலை, பட்டை என அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. இதை சாப்பிடும் போது மன அமைதி ஏற்படுவதுடன் இரவு நேரத்தில் தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். மேலும் இந்த பழத்தை சாப்பிடும் பொழுது உடலின் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து உடலின் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்படுபவர்கள் இந்த மலை இழந்த பழத்தை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள கால்சியம் சத்து காரணமாக எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் குடல் பகுதி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் வைட்டமின்கள் அதிகம் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தருவதுடன் உடல் உஷ்ணத்தைப் போக்கி உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வாந்தி தலைசுற்றல் ஏற்படக்கூடிய நேரங்களில் இலந்தை பழத்தை சாப்பிடும் பொழுது நிச்சயம் உடல் ஆரோக்கிய நிலையில் இருக்கும். மேலும் பெண்களின் மாதவிலக்கு நேரங்களில் ஏற்படக்கூடிய வயிற்று வலிகளை தடுக்கவும் இது பயன்படுகிறது. சர்க்கரை அளவினை அதிகரிக்க செய்யும், எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்று குறைவாக எடுத்துக் கொள்ளலாம். ஆப்பிள் திராட்சை ஆகிய பழங்களை விலை கொடுத்து வாங்கி உண்பதை விட குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய இலந்தைப் பழத்தை சாப்பிடும் பொழுது இதில் அந்த பழங்களைக் காட்டிலும் அதிக சத்து காணப்படுகிறது.