வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் – தமிழக அரசு
8 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 8 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகளுடன் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முகக்கவசம் அணிந்தபடியே 50% மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும். கல்லூரிகளில் நீச்சல் குளங்கள் போன்றவை மூடப்பட வேண்டும். மாணவர் விடுதியில் ஒரு அறையில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும். முடிந்தவரை கல்லூரிக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் மாணவர்கள் தங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. இதனிடையே அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தன்மையை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறக்கலாம் என்று மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடப்படுகிறது.