புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? நாளை வருகிறது மத்திய குழு
நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வரும் நிலையில் , சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது.
அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதன் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.ஆகவே ,தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டது.பின்னர் நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இதனிடையே நிவர் புயல் சேதங்களை கணக்கிட நாளை தமிழகம் வருகிறது மத்திய குழு.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு. 4 நாள் பயணமாக வரும் மத்திய குழு, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை மதியம் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது.பின்பு,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புயல் சேத விவரங்களை மதிப்பிடுகின்றனர்.