3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் ! அதிக மழை பெய்ய வாய்ப்பு
3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் உள்ள நிலையில், அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ராமநாதபுரம் அருகே ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வலுவிழந்த புரெவி புயலானது , ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 40 கி.மீ. தூரத்திலும் பாம்பனுக்கு மேற்கு – தென்மேற்கு திசையில் 70 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.கன்னியாகுமரிக்கு வட கிழக்கில் 160 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மெதுவாக மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்து ராமநாதபுரம் மற்றும் அருகிலுள்ள தூத்துக்குடி மாவட்டங்களை கடக்க வாய்ப்புள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் லட்சத்தீவில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு தமிழ்நாடு கடற்கரைக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.