எட்டு மாதங்களுக்கு பின்பு தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு!
கொரோனா பெரும் தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டு இருந்ததால் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழகம் முழுவதிலும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு தற்பொழுது வரையிலும் நடைமுறையில் இருக்கிறது. மார்ச் மாதம் முதலே பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் அடுத்த கல்வி ஆண்டு தற்பொழுது துவங்கி உள்ளதால் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கும் முறை அமலில் இருந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் இது சாதகமாக அமையவில்லை. செப்டம்பர் மாதத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அவர்களது விருப்பத்தின் பேரில் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்றது. அதுபோல முதுகலை பட்டப் படிப்பு ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வக வசதிகளுக்காக கல்லூரி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி கல்லூரிகளைத் திறக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனை எடுத்து 8 மாதங்களுக்குப் பிறகு திட்டமிட்டபடியே தற்பொழுது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள், முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய அறிவியல் பொறியியல், தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் திட்டமிட்டபடி வருகிற இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். விரைவில் செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் இவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரிக்கு வரும் பொழுது முக கவசம் அணிந்து வளாகத்திற்குள் உரிய சீரான சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்களிடம் உரையாடும்போது மாணவர்களுடன் உரையாடும் போதும் போதிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், அவ்வப்போது கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வளாகத்தையும் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.