#Burevi Cyclone: வேகம் எடுக்கும் புரவி! தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட்!
புயல் கரையை கடக்கும் போது, 95கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இலங்கையின் 330 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், இந்த புயல் வேகமாக நகர்ந்து வருவதால், இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புயல் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்றும், அதே வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த புயல் கரையை கடக்கும் போது, 95கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.