எச்சரிக்கை: நாளை காலை உருவாகிறது “புரெவி புயல்” – சென்னை வானிலை ஆய்வு மையம்!
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், நாளை காலை புயலாக வலுபெறவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கன்னியாகுமரிக்கு தென் கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்து வருகிறதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, இலங்கை திரிகோணமலை பகுதியில் நாளை மாலை அல்லது இரவில் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும் என தெரிவித்தார்.
இதன்காரணமாக நாளை தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.