இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனை..!
இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் (வயது 35), கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக போற்றப்படுகிறார். 1999ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான மிதாலி ராஜ் தன் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து (114* ரன்கள்) இந்தியாவை வெற்றிபெறச் செய்தார்.
கடந்த 19 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக அரங்கில் பிரபலமடையச் செய்ததில் மிதாலி ராஜ் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து உலக அரங்கில் முதல் இடத்தில் உள்ள மிதாலி, ஒட்டுமொத்தமாக 6295 ரன்கள் எடுத்துள்ளார், இவரின் சராசரி 50.36 ஆகும்.
எண்ணற்ற பல சாதனைகளை கைவசம் வைத்திருக்கும் மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக 2003ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று நாக்பூரில் நடந்துவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களமிறங்கியுள்ள மிதாலி ராஜ் உலகிலேயே அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற அரிய சாதனையை படைத்துள்ளார். இது அவருக்கு 192வது போட்டியாகும். இங்கிலாந்து கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸின் சாதனையை (191 போட்டி) அவர் முறியடித்துள்ளார்.
இப்பட்டியலில் 167 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியைச் சேர்ந்த ஜூலன் கோஸ்வாமி 3வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த ஒரே வீராங்கனையாக மிதாலி வலம்வருகிறார். இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு தலைமையேற்று வழிநடத்திய பெருமையையும் மிதாலி பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.