கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால் துணை வேந்தர் வந்திருக்கிறார்…!கமல்ஹாசன் காட்டம் …!

Default Image

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால் துணை வேந்தர் வந்திருக்கிறார் என  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்  சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சூரப்பா என்பவரை  நியமித்திருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆளுநரின் செயல் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இருப்பதாக முகநூல் பதிவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காவிரிப் பிரச்சினை கொழுந்து விட்டு எரிகின்ற நேரத்தில், தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும் தருணத்தில், கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சூரப்பா என்பவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்திருக்கும் ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்ணின் மைந்தர்களாக இருக்கும் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை “காவி” மயமாக்க வேண்டாம் என்றும் ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மிகப்பெரிய மோசடி என்று குற்றம்சாட்டியுள்ள ராமதாஸ், தகுதி அடிப்படையில் தான் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டார் என்றால் நேர்காணலுக்கு முன்பாகவே சூரப்பா தான் துணைவேந்தர் என்று செய்தி பரவியது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை இது யூகம் என்றால் கூட சூரப்பாவே இதை உறுதி செய்தது எப்படி? என்றும் அவர் வினவியுள்ளார். ஆளுனர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதைப் போன்று சூரப்பா மெச்சத்தக்க நிர்வாகியோ, கல்வியாளரோ அல்ல என்று கூறியுள்ள ராமதாஸ், பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட சூரப்பாவை அந்த பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று கூறி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குனராக பணியாற்றிய போது பெரும்பாலான நாட்களில் பணிக்கு வராதது, பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை தமது கண்டுபிடிப்பாக காட்டியது, பேராசிரியர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது என அவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளதாகவும் ராமதாஸ் பட்டியலிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை தமிழக ஆளுனர் ரத்து செய்ய வேண்டும் என்றும், தவறினால் எதிர்த்து போராட்டம் நடைபெறும் என்றும் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதியும், திறமையும், அனுபவமும் வாய்ந்த பேராசிரியர் பெருமக்கள் பலர் விண்ணப்பித்ததை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா அவர்களை அமர்த்தி இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில்  கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது? என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்