நிவர் புயல்: இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் காரணமாக இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் :
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இன்று காலை புயலாக வலுவடைந்து நிவர் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், அதிக கனமழை பெய்யக்கூடும் என்று நேற்று பாலச்சந்திரன் கூறினார். அந்த வகையில், காற்றின் வேகம் சுமார் 100 முதல் 120கிமீ வேகத்தில் வீசும் என்றும் அவர் தெரிவித்தார்.
8 மாவட்டங்களில் அதீத கனமழை:
சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.