தமிழகத்தில் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது!
ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தையொட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து சிதம்பரம் கிள்ளை ரயில் நிலையத்தில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்ட நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்வதற்காக கிள்ளை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ரயிலை திமுகவினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னை திருநின்றவூரில் அனைத்து கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற ரயிலை மறித்ததோடு, வேளச்சேரி சென்ற ரயிலையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். பின்னர் ரயில் நிலையத்தின் வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட பேருந்து ஒன்று கடத்தூர் பகுதியை கடந்தபோது அதன் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். இதேபோல் அதற்கு பின்னால் வந்த அரசு பேருந்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் மத்திய அரசின் பாரத மிகுமின் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை வளாகத்தில் திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதனால், தொழிற்சாலை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். பல்லவன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.