தமிழகம் முழுவதும் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி…!

Default Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், இப்பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் நிலைபாட்டினை எதிர்த்தும், தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து விடுத்த அறைகூவலை ஏற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டம் மக்கள் பேராதாரவுடன் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றுள்ளது.

சென்னை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை 2 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. அதுபோல் திருவாரூர் மாவட்டத்தில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இம்மறியல் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அடாவடித்தனமாக செயல்பட்டு போராட்டக்காரர்களை கீழே தள்ளியுள்ளார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் கீழே விழுந்து காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல காவல்துறையினர் பல இடங்களில் அத்துமீறி நடந்துள்ளனர். காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களை திடீரென்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் தாக்கியதில் யாசர் அராபத் என்ற ஊழியர் கை முறிந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆர்.எஸ்.எஸ்.சின் இத்தகைய அராஜக வன்முறை நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து நடத்திய இந்த மாநிலந்தழுவிய முழுஅடைப்பு போராட்டத்தில் தங்களது உறுதியான ஆதரவை தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான அரசியல் கட்சிகளின் ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள், இளைஞர்கள், மாதர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சகல பகுதி மக்களும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல தமிழகம் முழுவதிலும் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற பொதுவேலைநிறுத்தத்திலும், மறியல் போராட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று கைதாகியுள்ளனர். பல்வேறு வர்த்தக அமைப்புகளும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அதை மகத்தான வகையில் வெற்றிபெறச் செய்த அனைத்து தரப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இப்போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர் போராட்டமாக நீடிக்கும். அனைத்துப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்