காவல்துறை விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் …!

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காவல்துறையினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்டாலும் அவ்வப்போது நடக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும் என்று  கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக காவல்துறைக்கு தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 காவல்துணை கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. அத்துடன் 2017-ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்க்காவல்படைகளுக்கான குடியரசுத்தலைவர் விருது, உள்துறை அமைச்சர் விருது, முதலமைச்சர் விருது ஆகிய விருதுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றி தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் காவல்துறையினருக்கு அதிக பதக்கங்கள் வழங்கப்படுவது தமிழகத்தில்தான் என்றும் அதனால்தான் காவல்துறையினர் உத்வேகத்துடன் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் 201 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகைசால் பணிக்கான குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றார். விருதுகளை வழங்கி விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியான மாநிலம் தமிழகம் மட்டுமே என்ற பெருமைக்கு காரணம் காவல்துறைதான் என புகழாரம் சூட்டினார். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டாலும், அவ்வப்போது சில விரும்பத்தகாத நிகழ்வுகளையும் தவிர்த்திட வேண்டும் என்றும் சென்னையில் நடந்த காவல்துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

சிறப்பாக பயிற்சி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்கள் வழங்கப்பட்டன. டி.எஸ்.பி.க்களுக்கான அனைத்து பயிற்சிலும் சிறப்பாக செயல்பட்டதாக ஈ.சதீஷ்குமார் என்பவருக்கு வீரவாளும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. தமக்கு துணை ஆட்சியர் பதவி கிடைத்தும் காவல்துறையின் மீதுள்ள விருப்பம் காரணமாக தாம் இந்தத்துறையைத் தேர்ந்தடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

விருது வழங்கும் நிகழ்ச்சிகளை அடுத்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்