நிவர் புயல் எதிரொலி ! வேல் யாத்திரை ரத்து – எல்.முருகன் அறிவிப்பு
நாளை நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 24 , 25 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை,நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்க்கு தமிழக அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்,தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர்.இந்த யாத்திரை டிசம்பர் 6-ஆம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதால், பல்வேறு பிரச்சனைகள் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து, டிசம்பர் 6 -ஆம் தேதி வேல் யாத்திரை நிறைவு பெறுவதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில்,டிசம்பர் 7-ஆம் தேதி நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தமிழகத்தில் நிவர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்,புதுச்சேரியின் தென்கிழக்கே 500 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.நாளை பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 24 , 25 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.மேலும் நிவர் புயலால் பாதிக்கும் வாய்ப்புள்ள மக்களுக்கு உதவி செய்திட தயார் நிலையில் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.