காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணமே திமுகதான்…!முதல்வர் சாடல் …!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி பிரச்சனைக்கு காரணமே திமுகதான் என்றும், கபட நாடகத்தின் கதாநாயகனாக திமுக திகழ்வதாக, குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலையில் உண்ணாவிரத பந்தலில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி பிரச்சனைக்கு திமுக தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினார். 1974ம் ஆண்டு திமுக ஆட்சியில், ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தால் இன்றைக்கு நாம் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றும், சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் திமுக துரோகம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக, எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறான கருத்துக்களை திணித்து வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, அதிமுக அரசின் அறவழிப் போராட்டம் தொடரும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பழச்சாறு வழங்கப்பட்டு, போராட்டம் நிறைவுபெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.