உச்சநீதிமன்றம் திட்டவட்டம்….!வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான தீர்ப்பில் உடனடி மாற்றம் இல்லை…!

Default Image

உச்சநீமன்றம் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான உத்தரவுக்கு தடைவிதிக்க  மறுத்து விட்டது. அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே தங்களது நோக்கம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் விசாரணையின்றி கைது செய்யலாம் என்பது உள்ளிட்ட சில பிரிவுகளில் திருத்தம் செய்யுமாறு கடந்த மாதம் 20 ஆம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், வடமாநிலங்களில் பெரும் போராட்டமும் வெடித்தது.

இதனையடுத்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு, மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு  மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முதலில் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், மார்ச் 20 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைப் போன்ற பதற்றமான சூழலை ஏற்படுத்தி விட்டதாக எடுத்துரைத்தார். பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் சிலர் பலியாகிவிட்டதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் நீதிபதியிடம் முறையிட்டார்.

இதையடுத்து, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு லலித் (AK Goel – UU Lalit) ஆகியோரின் அமர்வு மறுஆய்வு மனுவை விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு லலித் அமர்வு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் எதிரானதல்ல என்றும், அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதே தங்களது நோக்கம் என்றும் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் மார்ச் 20 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்றும், அது தொடர்பான மத்திய அரசின் மனு10 நாட்களுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, அனைத்துக் கட்சிகளும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான தங்களது கருத்துகளை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்