கிறிஸ்துமஸுக்கு முன் கொரோனா தடுப்பூசி விநியோகம் – ஃபைசர் பயோடெக் நிறுவனம்!
கிறிஸ்துமஸுக்கு முன் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படலாம் என ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது, இந்நிலையில் இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் போட்டி போட்டு கடந்த சில மாதங்களாக தங்களது ஆராய்ச்சி கூடங்களில் இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல தோல்வியடைந்தாலும் சில மருந்துகள் வெற்றி அடைந்து வருகிறது. ஆனால் முறையான கொரோனா தடுப்பூசி என்று இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்து வந்த கொரோனா தடுப்பூசி தற்பொழுது 95% செயல்திறன் கொண்டுள்ளதாக நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களின் தயாரிப்பும் தற்பொழுது முன்னிலையில் இருப்பதால் விரைந்து தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரவேண்டுமென மருந்து தர கட்டுப்பாடுகள் இந்த அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே இருவரும் போட்டி போட்டுக்கொண்டு யார் முதலில் வெளியிடுவது என்பது குறித்து தற்போது ஆராய்ச்சிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். அண்மையில் ஃபைசர் தடுப்பூசி தன்னார்வலர்கள் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடுமையான பக்கவிளைவுகள் ஏதும் இல்லை எனவும் தற்பொழுது மருந்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
95 சதவீத வெற்றியை ஃபைசர் -பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி கொண்டிருப்பதால் வருகிற கிறிஸ்துமஸுக்கு முன்பதாகவே தடுப்பூசி விநியோகம் நடைபெறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பயோஎன்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசிக்கான நிபந்தனை ஒப்புதல் டிசம்பர் இரண்டாம் பாதியில் பெறலாம் எனவும், அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் கிறிஸ்துமஸுக்கு முன்பதாக தடுப்பூசி விநியோகத்தை துவங்குவோம் எனவும் கூறியுள்ளார்.