க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ்ப் பதிப்புலகத்திற்குப் பேரிழப்பாகும்- முதல்வர் பழனிச்சாமி.!
க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ்ப் பதிப்புலகத்திற்குப் பேரிழப்பாகும் என்று கூறி தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ் பதிப்புத் துறையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்
மரண படுக்கையிலும் சுவாச கருவி பொருத்தியவாறு அவர் தனது க்ரியா அகராதியின் திருத்தப்பட்ட 3-ம் பதிப்பினை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னணிப் பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் ஆசிரியருமான ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அன்பும், எளிமையும், கடின உழைப்பும் மிகுந்த க்ரியா ராமகிருஷ்ணன், விளம்பரத் துறையில் பணியாற்றி, பின்னர் தனது 30-வது வயதில் பதிப்பகத் துறைக்கு வந்தவர். இவர் 1974-ம் ஆண்டு க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார். தனது க்ரியா பதிப்பகம் மூலம் தற்காலத் தமிழுக்கான அகராதி ஒன்றை வெளியிட்டார். இந்த அகராதி தமிழ்ப் பதிப்புலகத்தில் பெரும் சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் எனப் பல தலைப்புகளின் கீழ் க்ரியா ராமகிருஷ்ணன் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவர், பல்வேறு பிறமொழிப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமைக்குரியவர்.
க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ்ப் பதிப்புலகத்திற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பதிப்புலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பதிப்புலகத்தின் முன்னணி பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் ஆசிரியருமான திரு.க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று மறைவுற்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், பதிப்புலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/kNc9HCHuBj
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 17, 2020