கபில் சிபல் பேச்சுக்கு.. அசோக் கெலாட் பாய்ச்சல்..!
பீகார் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கபில் சிபல், மக்களால் பாஜகவிற்கு எதிராக வலுவான மாற்றுக்கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. உள்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அமைப்பு ரீதியாக என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தெரியும். அதற்கான பதில்களும் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கான பதில் தெரியும். ஆனால், அவர்கள் அந்த பதிலை ஏற்க மறுக்கின்றனர் என தெரிவித்தார். இந்நிலையில், கபில் சிபலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், கட்சியின் மூத்த தலைவர் ஊடகங்களில் உள் கட்சி பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
“கபில் சிபலின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது” என்று கெஹ்லாட் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் தெரிவித்துள்ளார். 1969, 1977, 1989 மற்றும் பின்னர் 1996 இல் பல்வேறு நெருக்கடிகளை காங்கிரஸ் கண்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் நமது சித்தாந்தம், திட்டங்கள், கொள்கைகள் மற்றும் கட்சித் தலைமையின் மீதான உறுதியான நம்பிக்கை காரணமாக நாங்கள் வலுவாக வெளிவந்தோம்.
ஒவ்வொரு நெருக்கடியிலும் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம், மேலும் 2004 ஆம் ஆண்டில் சோனியாஜியின் திறமையான தலைமையின் கீழ் அரசாங்கத்தை அமைத்தோம். தேர்தல் தோல்விகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு நெருக்கடிகளுக்கும் பின்னர் நாங்கள் வலுவாகவும் ஒற்றுமையாகவும் வெளியே வந்தோம்.
இன்றும் கூட, இந்த தேசத்தை ஒன்றிணைத்து விரிவான வளர்ச்சியின் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான் என தெரிவித்துள்ளார்.