நாளுக்கு நாள் குறையும் கொரோனா – இந்திய மக்கள் மகிழ்ச்சி!
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து கொண்டே செல்கிறது.
உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் புதிதாக நேற்று ஒரே நாளில் 28,555 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய தினங்களை கணக்கிடுகையில் மிகக் குறைவான அளவிலேயே புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக இந்தியாவில் 88,74,172 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 1,30,559 பேர் உயிரிழந்துள்ளனர். 82,88,169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,55,444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து கொண்டேதான் செல்கிறது. பாதிக்கப்படுபவர்களில் 95 சதவீதத்தினர் குணமடைந்து தான் செல்கின்றனர். எனவே இந்திய மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் இன்னும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து அரசு கூறும் வழிகாட்டுதலின் படி நடந்து வந்தால் முழுவதுமாக கொரோனா தொற்றிலிருந்து இந்தியா விடுபடும்.