அதிரடி வீரர்கள் மெக்கல்லம், டிவில்லியர்ஸ், டி காக்குடன் ஐபிஎல் கோப்பையை வெல்வாரா விராட்?ஆர்சிபி ஓர் அலசல்…!
2008-ம் ஆண்டு யு-19 உலகக்கோப்பை வெற்றிப் பின்னணியில் இளம் வீரராக அணிக்குள் நுழைந்தார் விராட். இப்போது அபரிமிதமாக வளர்ந்து உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவராகவும் அதிக வெற்றிகளை குவிக்கும் இந்திய கேப்டனாகவும் வளர்ச்சி கண்டுள்ளார்.
இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 3 முறை பெங்களூரு அணி நுழைந்துள்ளது, ஆனால் கோப்பை கைநழுவிப் போன கனவாகவே இருந்து வருகிறது. 2016-ல் வெற்றி வாய்ப்பை இழந்தது. கடந்த சீசன் ஆர்சிபி மறக்க வேண்டிய சீசனாக அமைந்தது.
ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பலவீனம் அதன் பந்து வீச்சில்தான் உள்ளது ஆனால் இம்முறை அதனைச் சரி செய்யும் விதமாக வீரர்களை ஏலம் எடுத்துள்ளனர். நிதாஹஸ் டிராபி கண்டுபிடிப்பான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கி வரும் சாஹலுடன் இணைகிறார். ஆனால் இம்முறை சவால் இருவருக்குமேதான், காரணம் பலதரப்பட்ட தரமான பேட்ஸ்மென்களுக்கு இருவரும் வீசி நிரூபிக்க வேண்டியுள்ளது.
பேட்டிங்கில் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரிக்கும், கோலிக்கும் அணிச்சேர்க்கையை வடிவமைப்பதில் நிச்சயம் தலைவலிதான். ஏனெனில் ஆல்ரவுண்டர்கள் கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, கோரி ஆண்டர்சன், அதிரடி விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக், பிரெண்டன் மெக்கல்லம், அனைத்துக்கும் மேலாக ஓய்வுக்குக் கூட உட்கார வைக்க முடியாத பார்மில் இருக்கும் ஏ.பி.டிவில்லியர்ஸ். ஆகியோருக்கிடையே அணித்தேர்வு துல்லியமாக அமைவது முக்கியம். 4 அயல்நாட்டு வீரர்கள்தான் 11-ல் இடம்பெற முடியும்.
இந்திய பேட்ஸ்மென்கள் சர்பராஸ் கான், மனன் வோரா, மந்தீப் சிங் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சு ரகம்:
டிம் சவுதி, கிறிஸ் வோக்ஸ், மொகமது சிராஜ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் வெகப்பந்து வீச்சில் இருக்க ஸ்பின்னில் வாஷிங்டன் சுந்தர், சாஹல் ஆகியோருடன் பவன் நெகி, முருகன் அஸ்வின் என்று கூடுதல் ஸ்பின் தெரிவு உள்ளது.
வாஷிங்டன் சுந்தர் ஆர்சிபி அணியின் துருப்புச் சீட்டு, அவரை அணியில் எடுப்பது ஒரு தந்திரோபாயம், அதை விட அவரைப் பயன்படுத்துவது இன்னொரு தந்திரமான செயலைக் கோருவது. எனவே இவர் ஒரு துருப்புச் சீட்டுதான். ரூ.3.2 கோடிக்கு இவரை ஏலம் எடுத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் திட்டம் கையில் இருக்கும் என்றே தோன்றுகிறது.
இவ்வளவு சாதகங்களுடன், அதிரடி பேட்ஸ்மென்களும் திறமையான ஆல்ரவுண்டர்கள், பவுலர்கள விராட் கோலி என்ற மலையின் கீழ் இணைய இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் ஒருவேளை விராட் கோலியின் கையில் கோப்பையை அளிப்பதாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் இந்திய அணியின் தேர்வு விவகாரத்தை எளிதில் கையாளலாம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்வளவு திறமை படைத்த ஒரு கூட்டத்தையே வைத்துக் கொண்டு அணித்தேர்வில் சோடை போனால் அது கடும் விமர்சனங்களை எழுப்பும் என்பதையும் கோலி அறிந்தேயிருப்பார்.
எப்படியிருந்தாலும் அவரது கேப்டன்சியில் இதுவரை அவரை விட்டு நழுவிச் சென்ற ஐபிஎல் கோப்பையை அவர் கைப்பற்ற நிச்சயம் பெரிய அளவில் போராடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.