அசாமில் 6 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 2 பெண்கள்.!
அசாமில் 6 ஆண்கள் சேர்ந்து 2 சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிபுராவை சேர்ந்த இரண்டு சகோதரிகள் வெள்ளிக்கிழமையன்று தனது தாயை சில்சாரில் உள்ள கேன்சர் மருத்துவமனையில் சந்தித்து விட்டு வாடகை காரில் திரும்பியுள்ளனர் . அப்போது கார் அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் பகுதியில் நுழைந்த போது , காரை ஓட்டி வந்த ஓட்டுநர் அந்த இரு பெண்களையும் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே இருந்த 4 நபர்களும் இணைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .
அதனையடுத்து பெண்களிடமிருந்து பணம், மொபைல் மற்றும் நகை ஆகியவற்றை பறித்து கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் போலிசாருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து சனிக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் .
அதில் முதலில் பெண்களை ஏற்றி சென்ற காரில் டிரைவர் மட்டுமே இருந்ததாக கருதப்பட்ட நிலையில் அந்த காரில் மேலும் ஒருவர் உதவியுள்ளார் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது . தற்போது இந்த குற்றம் செய்த குற்றவாளிகளில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும் , மேலும் ஒருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கரீம்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி)மயங்க் குமார் தெரிவித்துள்ளார்.