தமிழகம் முழுவதும் சூடு பிடிக்கும் திமுகவினர் போராட்டம் ..!ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்துபோராட்டம்…!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பேருந்து நிலையம் நோக்கி பேரணியாக வந்த திமுகவினர், தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில் பெரியார் தூண் அருகே சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி திமுக சார்பில் ஸ்டாலின் கைதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் மாவட்ட அமைப்பாளர் சிவா தலைமையில் திரண்ட திமுகவினர், புதுச்சேரி பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்டாலின் கைதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் திரளாக வந்து கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.