நாளை காங்கிரஸில் இணையும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.!
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி முன்னிலையில் நாளை காங்கிரஸ் கட்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை என்பவர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதல் மாணவராகவும், இந்தியாவில் 9-வது மாணவராகவும் வெற்றி பெற்றவர் தான் சென்னையை சேர்ந்த சசிகாந்த் செந்தில். அதனையடுத்து பெல்லாரி மாவட்டத்தின் துணை ஆட்சியராக 2009-2012 காலக்கட்டத்தில் பணியாற்றிய இவர் 2013-ல் மாவட்ட ஆட்சியராக சித்ரதுர்கா மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார். அதனையடுத்து பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக நேர்மையாக பணியாற்றிய சசிகாந்தை அரசாங்கம் பணியிட மாற்றம் செய்ய முயற்சித்த போது , அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதன் மூலம் அவரின் மீதுள்ள மக்களின் பாசம் தென்பட்டது.
அதனையடுத்து 2017-ல் மத கலவரம் தொடர்ச்சியாக நடந்த கன்னட மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அங்கு நடக்கும் மத கலவரங்களை தடுப்பதற்காக சமூக நல்லிணக்கம் கூட்டங்களை நடத்தினார் . அதனையடுத்து 2019-ல் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்ட இவர்,தனது ராஜினாமா கடிதத்தில் நாட்டில் நடக்கும் சில சம்பவங்களை சகிக்க முடியாமலும், மத்திய அரசு கூறும் கருத்துகள் பிடிக்கமாலும் ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார் . அதனையடுத்து மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விமர்சனம் செய்தார் .இந்த நிலையில் தற்போது இவர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் , முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி முன்னிலையில் நாளை சசிகாந்த் செந்தில் காங்கிரஸில் சேரவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.