வியன்னா பயங்கரவாத தாக்குதல்: மசூதியை மூட ஆஸ்திரியா அரசாங்கம் முடிவு.!
வியன்னாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மசூதியை மூட ஆஸ்திரியா அரசாங்கம் உத்தரவிட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவை சுற்றியுள்ள 6 இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. திங்களன்று நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாக 15 பேர் காயமடைந்தனர். நகரத்தின் மையப் பகுதியில் உள்ள தேவாலயத்தை சுற்றி இந்த தாக்குதல் நடந்தது. தேவாலயத்தை இலக்கு வைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதா..? என்று தெரியவில்லை .
இந்த தாக்குதலை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 16 பேரில் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமையன்று வியன்னா வழக்கறிஞர் துறை அறிவித்தது. ஆஸ்திரியாவின் இந்த பெரிய தாக்குதலை தொடர்ந்து ஆஸ்திரியா அரசாங்கம் மசூதியை மூட உத்தரவிட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .
கூடுதல் தகவல்கள் உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் சூசேன் ராப் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த பின்னர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரியாவின் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மத சமூகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் நாங்கள் ஒரு மசூதியை மூட முடிவு செய்துள்ளதாகவும், மதக்கோட்பாடு குறித்த விதிகளை மீறியதாக கூறிய தகவலை அடுத்து மசூதி மூடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.