ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கமல்ஹாசன் தூத்துக்குடி வருகை …!
மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை; மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும் குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி வருகை தந்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார்.
இதன் பிறகு போராட்டக் குழுவினர் அவரை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று (ஏப்ரல் 1) கமல் ஹாசன் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். . குமாரரெட்டிபாளையத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார் கமல்ஹாசன்.
இந்நிலையில் புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை, மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும் குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.