சுப்பையா சண்முகத்தை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம் – மு.க.ஸ்டாலின்

Default Image

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.மதுரையில் ரூ.1264 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டார்.

மேலும், இதில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் ,கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுப்பையா சண்முகம்  உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம்  செய்யப்பட்டனர்.ஆனால் சுப்பையா சண்முகம் நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,மதுரை “எய்ம்ஸ்” மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பா.ஜ.க. எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல!அப்படியிருக்கும் போது – ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த – அதுவும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக – அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்தில் உருப்படியான நடவடிக்கை எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக முன்னெடுக்காத மத்திய பா.ஜ.க. அரசு, இப்படிப்பட்ட கோணல் புத்தியுள்ள ஒருவரை நிர்வாகக் குழுவில் இணைத்து, பெண்ணினத்தை அவமானப்படுத்திடும் வகையில் அமைத்திருப்பது, தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்