எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி….
ஏவுகணை சோதனையின் போது ஏவுகணை கப்பல் ஒன்றை துல்லியமாக தாக்கி அழிக்கும் வீடியோவை இந்திய கடற்படை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்திய மற்றும் சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.அவ்வபோது பாகிஸ்தானும் குடைச்சல் கொடுத்து வரும் சூழலில், இந்தியா தொடர்ந்து பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அரபிக்கடலில் சமீபத்தில் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அரபிக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, ஐ.என்.எஸ் பிரபால் என்ற போர் கப்பலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை, நீண்ட தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் காட்சி அதில், இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது. ஆனால், தாக்கி அழித்த ஏவுகணை எந்த வகையான ஏவுகணை என்ற தகவலை இந்திய கடற்படை தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்க பதிவில், கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை அதன் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட பழைய கப்பல் ஒன்றை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது, என்ற தகவல் மட்டும் கூறப்பட்டு இருந்தது.