கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!
மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத சென்னை அணி, 114 ரன்கள் மட்டுமே குவித்தது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 41 ஆம் போட்டியில் 3-வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் – இறுதி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகிய நிலையில், கேப்டன் பதவியை பொல்லார்ட் வகித்து வருகிறார். மேலும் சென்னை அணியில் வாட்சன், சாவ்லா மற்றும் ஜாதவ்க்கு பதிலாக, ருத்ராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் மற்றும் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை அணி அபாரமாக ஆடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அதன்படி சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெசிஸ் – ருத்ராஜ் களமிறங்கினார்கள். இருவரும் இணைந்து அணிக்காக அதிரடி தொடக்கத்தை கொடுப்பார்கள் என்ன எதிர்பார்த்த நிலையில், ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு 2 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெகதீசன் டக் அவுட் ஆக, அதிரடி வீரர் டு பிளெசிஸ் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த தோனி – ஜடேஜா கூட்டணி இணைந்தது. இருவரும் நிதானமாக ஆடிவந்தனர். 7 ரன்களில் ஜடேஜா வெளியேற, 16 ரன்களில் தோனி, ஒரு ரன் கூட எடுக்காமல் தீபக் சாஹர் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். அதன்பின் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் – சாம் கரண் கூட்டணி அதிரடியாக ஆடிவந்த நிலையில், 11 ரன்களில் தாக்கூர் வெளியேறினார்.
இறுதியாக சாம் கரண் அரைசதம் விலாச, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 114 ரன்கள் எடுத்தது. 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது மும்பை அணி களமிறங்கவுள்ளது.