13 ஆண்டுகளாக பயன்படுத்தபடாத செல்போன் டவர் – 3 நாள் டவரிலேயே தங்கியிருந்து கொள்ளையடித்த கும்பல்!
13 ஆண்டுகளாக பயன்படுத்தபடாத செல்போன் டவர் குறித்து அறிந்து கடந்த 3 நாட்களாக டவரிலேயே தங்கியிருந்து கொள்ளையடித்த கும்பல் கைது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி எனும் இடத்தின் அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று கடந்த 13 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் அப்படியே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த செல்போன் டவர் குறித்து அறிந்த மர்ம கும்பலை சேர்ந்த 3 பேர் அதை முழுவதுமாக கொள்ளையடிக்க முடிவு செய்தனர். அதன் பின்பு அந்த டவரின் அருகில் உள்ள தானியங்கி இயந்திரங்கள், ஜெனரேட்டர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்ற மர்ம நபர்கள் 3 நாட்களாக டவரின் மேலே தங்கியிருந்து டவரில் உள்ள கம்பிகள் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தையும் கழற்றி சென்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு வந்த அந்த டவரின் உரிமையாளர் அவர்களை பிடித்து விசாரித்ததில் செல்போன் டவரை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், செல்போன் டவரில் கொள்ளையடிக்க முயற்சித்த 3 பேரையும் கைது செய்துள்ளதுடன், அவர்கள் திருடியதற்கு பயன்படுத்திய இரண்டு லாரிகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் என அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.