தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அரசு அனுமதி
தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழுவின் 3-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதிய முதலீடுகள் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மேலும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், கோவை, நாமக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 26 திட்டங்கள் மூலமாக ரூ.25,213 கோடி தொழில் முதலீடுகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 49,033 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை விரைந்து உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.