சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.!
நேற்று மத்திய பிரதேசத்தின் பார்கி அணை கால்வாயில் இருந்து 13 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், ராகுல் என்ற மோனு விஸ்வகர்மா (30), மலாய் ராய் (25), கரண் ஜாகி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் விஸ்வகர்மா என்ற முக்கிய குற்றவாளிக்கு உடல்நிலை சரியில்லாமல், அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று இரவு விஸ்வகர்மா இறந்தார் என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜி பி கண்டேல் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை இறந்த சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் இருந்து சில பொருட்களை வாங்கச் சென்றபோது கடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிச்சுவா கிராமத்திற்கு அருகிலுள்ள பார்கி அணை கால்வாயில் அந்த சிறுவனின் உடல் மிதந்து கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் வேலையில்லாமல் இருந்ததாலும், கடந்த ஒரு மாதமாக பணம் இல்லாததாலும் தான் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறினார். அவர்கள் ரூ .2 கோடி கேட்டநிலையில், ரூ .8 லட்சம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த சிறுவனை கொன்றனர் என கூறப்படுகிறது.