ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 250 கோடி மதிப்பில் நூல் வாங்கப்படுகிறது எனவும், இதில் தரமற்ற நூல் நெசவாளர்களுக்கு வழங்கப்படுவதால் தரமற்ற வேட்டி சேலைகளை உற்பத்தி செய்யக் கூடிய நிலைமை ஏற்படுகிறது எனவும் நெசவாளர்களுக்கு பயனாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்தூர் விசைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அவர்கள் தலைமையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நூலின் தரம் குறித்தும் முறைகேடுகள் குறித்தும் ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
தயாரிக்கப்பட்ட வேட்டி சேலைகளை தர சோதனை செய்து பார்க்கும் பொழுது நெசவாளர்களுக்கு வழங்கப்படுகின்ற நூலை ஏன் தர சோதனை செய்வதில்லை என்று நீதிபதி புஷ்பா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை செயலாளர் மற்றும் கைத்தறி இயக்குனர் இந்த கேள்விக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.